அதுவொரு தேசியப் பாடசாலை. உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை என்று பிரிவுகளைக் கொண்டது. கல்வியிலும் விளையாட்டிலும் ஏனைய புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் நல்ல முன்னேற்றத்தைக் கண்ட பாடசாலை.
விஞ்ஞானப் பிரிவைப் பொறுத்த வரை நல்ல பெறுபேறுகளைப் பெற வேண்டும் என்பதற்காக பாடசாலை ஆரம்பிக்கும் முன்னரும் பாடசாலையின் பின்னரும் மேலதிக வகுப்புக்கள் நடைபெறுவதுண்டு. இதன் காரணமாக இறுதிப் பாடங்கள் வெற்றிடமாக இருந்தால் பாடசாலை விடுவதற்கு முன்னர் விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் அவர்கள் பாடசாலைக்கு வந்து மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
ஆனால் இந்த விடயம் கலைத்துறை மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை. விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் பாடசாலை விடுவதற்கு முன்னர் வீடுகளுக்குச் செல்வது போல் தாங்களும் செல்ல வேண்டும் என்று விரும்பினர். இது தொடர்பாக பாடசாலை நிருவாகத்திடம் அனுமதி கோரினர். தங்களுக்கும் இறுதிப் பாடங்கள் வெற்றிடமாக இருக்கின்றன. தாங்களும் பாடசாலை விடுவதற்கு முன் வீடு செல்ல வேண்டும் என்பதாக அவர்களின் கோரிக்கை அமைந்திருந்தது. எனினும் பாடசாலை நிருவாகம் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. இதனால் கலைத்துறை மாணவர்கள் தாம் புறக்கணிக்கப்படுகின்றோம் எனக் கருதினர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் அமைதியின்மை நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். பாடசாலைத் தளபாடங்களை அசைப்பதன் மூலம் ஒலி எழுப்பினர். பேனை மூடிகளைப் பயன்படுத்தி விசிலடித்தனர். வட்டமாக இருந்து சமயப் பாடல்களைக் கூட பாடினர்.
கலைத்துறை மாணவர்களின் இப்படியான நடவடிக்கைகள் பாடசாலை நிருவாகத்திற்கு பிரச்சனைகளை உருவாக்கின. எனவே உயர்தர கலைத்துறை மாணவர்களை வீட்டிலிருந்து படிக்கும் படி பாடசாலை நிருவாகம் கூறியது. ஆனால் மாணவர்கள் தங்கள் பிரதான மூன்று பாடங்களில் ஒரு பாடத்திற்கு மாத்திரம் பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி கோரினர். ஏனைய இரண்டு பாடங்களுக்கு தனியார் வகுப்புக்களுக்கு மாணவர்கள் செல்வதால் இந்தக் கோரிக்கையை விடுத்தனர். பாடசாலை நிருவாகமும் அதற்கு சம்மதித்தது. எனவே குறிப்பிட்ட பாடம் இருக்கும் நேரத்தில் மாத்திரம் ஆண் மாணவர்கள் பாடசாலைக்கு வந்து வகுப்பறையில் இருந்து பாடத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பினர்.
உயர்தரப் பரீட்சை நடைபெறுவதற்கு 4 மாதங்களுக்கு முன்னதாகவே வழக்கமாக கற்றல் விடுமுறை (Study Leave) வழங்கப்படுவது வழக்கம் . ஆனால் இந்த மாணவர்களுக்கு பரீட்சைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே கற்றல் விடுமுறை வழங்கப்பட்டது.
மாணவர்களின் குழப்பங்கள் பெரிதாகத் தெரிந்ததால், பாடத்திட்டத்தை நிறைவு செய்யாமை போன்ற பாடசாலையுடன் தொடர்புடைய தவறுகள் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.
தசாப்தமொன்றுக்கு முன்னர் பாடசாலையொன்றில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் இது.
பாடசாலையொன்று மாணவர்களை சமமாக நடாத்துவது எவ்வளவு முக்கியமானது என்பதற்கு மேற்கண்ட சம்பவம் முக்கியமான ஒன்றாகும்.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |