படிப்பது எப்படி?

 


அன்பார்ந்த மாணவர்களே, இந்தப் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பீர்களாயின் நீங்கள் கற்பதற்கு ஆர்வமான ஒரு மாணவராவீர்கள். பாடங்களைப் படிப்பது என்பது பல்வேறு நுணுக்கங்களைக் கொண்டிருக்கின்றது. எனவே அது தொடர்பான விடயங்களை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஆர்வம்

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல படிப்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். எந்த விடயத்தை ஒருவர் செய்வதாக இருந்தாலும் அதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வம் இருந்தால்தான் அந்த விடயத்தை செய்வதில் கஷ்டங்கள் இடர்பாடுகள் ஏற்பட்டால் மனம் சலிக்காமல் செய்ய முடியும். நான் நல்ல பிரஜையாக வர  வேண்டும் . உலக விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும். நல்ல தொழிலொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நோக்கம் இருப்பவர்கள் ஆர்வத்துடன் படிப்பார்கள். 

படிப்பதற்கு உரிய இடம்

உங்கள் வீடுகளில் நீங்கள் படிப்பதற்கு உரிய இடமொன்றை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் உங்கள் கவனத்தைச் சிதறச் செய்யும் விடயங்களை வைத்திருக்க வேண்டாம். படிப்பது சம்மந்தப்பட்ட புத்தகங்கள், அப்பியாசப் புத்தகங்கள், எழுது கருவிகள் போன்றவற்றை வைத்திருங்கள். படிக்கும் இடம் அமைதியாக இருக்க வேண்டும். 


எனவே நீங்கள் படிக்கின்ற போது வீட்டில் தொலைக் காட்சியை சத்தமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். வானொலியை சத்தமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லது சத்தமாக கதைத்துக் கொண்டிருப்பார்கள். எனவே அவ்வாறான வேளைகளில் 'நான் படிக்கப் போகிறேன். நீங்கள் இவ்வாறு இருப்பது எனக்குத் தடங்கலாக இருக்கிறது. நான் படித்து முன்னேற வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் தொலைக்காட்சி வானொலிகளை அணைத்து விடுங்கள். அல்லது குறைந்த சத்தத்தில் பயன்படுத்துங்கள். சத்தமாகப் பேசாமல் அமைதியாகப் பேசுங்கள். அல்லது வேறு இடத்தில் சென்று பேசுங்கள்' என்று நீங்கள் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். 

தேவையேற்பட்டால் வீட்டு முற்றத்திலோ மரநிழலிலோ இருந்து கூட இயற்கைக் காற்றுடன் அமைதியாகப் படிக்க முடியும்.


படிக்கும் நேரம்

அதிகாலையில் தூங்கி எழும்புகின்ற போது மனம் அமைதியாகக் காணப்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். எனவே அதிகாலையில் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதிகாலையில் எழும்ப வேண்டுமானால் இரவில் நேர காலத்தோடு தூங்கச் செல்ல வேண்டும். சில மாணவர்கள் இரவு வேளைகளில் குடும்பத்துடன் இருந்து தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பார்கள். திரைப்படங்களைப் பார்ப்பார்கள். அல்லது நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருப்பார்கள். இவைகளைத் தவிர்த்து நேர காலத்துடன் நீங்கள் தூங்கச் செல்ல வேண்டும். 

பாடசாலை விட்டு வந்தும் நீங்கள் படிக்கலாம். அத்துடன் மாலை வேளைகளில் கட்டாயமாக நீங்கள் விளையாட வேண்டும். விளையாடுவதன் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படல் உடல் ஆரோக்கியமாகக் காணப்படல் என்று பல நன்மைகள் காணப்படுகின்றன. எனவே நீங்கள் மாலை வேளைகளில் விளையாடுங்கள். உங்களுக்குரிய ஏனைய பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுங்கள். அதன் பின்னர் இரவு வேளையில் உங்கள் படிப்பை நீங்கள் தொடரலாம். 

ஒவ்வொரு நாளும் மீட்டல்

பாடசாலையில் ஒவ்வொரு நாளும் படித்துத் தருபவற்றை அன்று இரவே நீங்கள் மீட்டிப் படிக்க வேண்டும். பகல் நேரத்தில் பாடசாலையில் படிப்பது அன்றைக்கு ஞாபகத்தில் இருக்கும். அதனை மீண்டும் இரவில் படித்தால் இன்னும் நன்றாக மனதில் பதியும். 

மனனம் வேண்டாம்.

அதிகமானவர்கள் பாடங்களை மனனம் செய்வார்கள். அது ஒரு ஆரோக்கியமான முறையல்ல. பாடங்களை கிரகித்து வாசிக்க வேண்டும். அப்போதே நீங்கள் அந்தப் பாடத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். 

கணிதப் பாடம் படித்தல்.

அதிகமான மாணவர்கள் கணிதப் பாடம் கடினமானது என்று நினைக்கின்றார்கள். கணிதம் மாத்திரமல்ல ஏனைய எல்லாப் பாடங்களும் இலகுவானவைதான். நாம் திட்டமிட்டு நுட்பமாகப் படிப்பதில்தான் எமது வெற்றி காணப்படுகிறது. எனவே கணிதத்தைப் பொறுத்தவரை நீங்கள் கணக்குகளை செய்து பார்க்க வேண்டும்.  வகுப்பறையில் நீங்கள் செய்த கணக்குகள் உங்கள் அப்பியாசப் புத்தகத்தில் காணப்படும். அந்தக் கணக்குகளை எழுதி செய்து பார்க்க வேண்டும். பின்னர் நீங்கள் பெற்றுக் கொண்ட விடையும் அப்பியாசப் புத்தகத்தில் உள்ள விடையும் சரியாக இருக்கின்றதா என்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் செய்து பார்த்தது பிழையாக இருந்தால் மீண்டுமொரு முறை செய்து பாருங்கள். தொடர்ந்து உங்களால் விடையைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அல்லது அடுத்த நாள் பாடசாலையில் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். 

நண்பருடன் கலந்துரையாடல்

நீங்கள் படிக்கின்ற விடயங்களை உங்கள் நண்பருடன் கலந்துரையாடுங்கள். உதாரணமாக வரலாறு பாடத்தில் முதலாம் விஜயபாகு பற்றிக் காணப்படுகின்றது. அதனை நீங்கள் படித்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பரையும் படித்துக் கொண்டு வரச் சொல்லுங்கள். பின்னர் முதலாம் விஜயபாகு பற்றி உங்களுக்குத் தெரிந்த விடயங்களை ஒவ்வொன்றாகக் கூறுங்கள். அதனை நண்பர் கேட்டுக் கொண்டிருப்பார். தவறுகள் இருந்தால் அவர் திருத்திச் சொல்வார். அதேபோல் நண்பரையும் முதலாம் விஜயபாகு பற்றி கூறச் சொல்லுங்கள். அவரும் ஒவ்வொரு விடயமாகக் கூறுவார். தவறுகள் இருந்தால் நீங்கள் திருத்திக் கூறுங்கள். இவ்வாறு செய்கின்ற போது நன்றாக மனதில் பதியும். 

அதே போல் நண்பருடன் கேள்வி கேட்டும் படிக்கலாம். உதாரணமாக வகுப்பறையில் செய்த வினா விடைகள் உங்கள் பயிற்சிப் புத்தகத்தில் காணப்படும். நீங்கள் கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்கலாம். அதற்கு விடையை நண்பர் கூறுவார். நண்பர் கேள்விகளைக் கேட்கின்ற போது நீங்கள் விடைகளைக் கூறலாம். 

நண்பர்கள் இல்லாத சூழ்நிலைகளில் உங்கள் முன்னால் ஒருவர் இருப்பதாகக் கற்பனை செய்து அவருக்கு நீங்கள் கற்பிப்பது போல் மனதால் நினைத்து விளங்கப்படுத்தலாம்.

எழுதிப் படித்தல்

நீங்கள் படிக்கின்ற விடயங்களை தாளில் எழுதிப் பார்க்க வேண்டும். விஞ்ஞானம், கணிதப் பாடங்களில் சமன்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை தாளொன்றில் எழுதிப்பார்க்கலாம். இவை மாத்திரமல்ல ஏனைய பாடங்களையும் எழுதிப் பார்க்கலாம். உதாரணமாக வரலாறு பாடத்தில் கண்டி இராசதானியைப் பற்றி நீங்கள் படிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.. பின்னர் நீங்கள் படித்த விடயங்களை தாளொன்றில் சுருக்கமாக எழுதிப் வேண்டும். தவறுகள் ஏற்பட்டால் திருத்திக் கொள்ளலாம். பரீட்சையில் யோசித்து விடைகளை எழுதுவதற்கு இந்தப் பயிற்சி உதவும். 


பழைய பாடங்களைப் படித்தல்

அன்று பாடசாலையில் படித்ததை அன்றே மீட்டல் செய்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பழைய பாடங்களைப் படிப்பதும் முக்கியமானதாகும். சராசரியாக வாரத்தில் ஒரு நாளாவது பழைய பாடங்களைப் படிக்க வேண்டும். உதாரணமாக புவியியல் பாடத்தில் அலகு மூன்றை பாடசாலையில் படிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனை வீட்டில் வந்தும் மீட்டல் செய்வீர்கள். அதேபோல் முதலாம் , இரண்டாம் அலகுகளை அந்த வாரம் மீட்டல் செய்ய வேண்டும். அப்போதே பழைய விடயங்கள் மறக்காமல் மனதில் இருக்கும். பழைய பாடங்களை மீண்டும் மீண்டும் படிக்கின்ற போது அவை இலகுவாக மனதில் பதிந்து கொள்ளும். 

கடந்த கால வினாத்தாள்களை செய்து பார்த்தல்

கடந்த கால வினாத்தாள்களை பழைய மாணவர்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அல்லது கடந்த கால வினாத்தாள்கள் விடைகளுடன் விற்பனைக்கு காணப்படுகின்றன. அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த கால வினாத்தாள்களை ஒவ்வொன்றாக நீங்கள் செய்து பார்க்க வேண்டும். அவ்வாறு செய்கின்ற போது வினாத்தாள்களின் அமைப்பு முறையை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும். அதே போல் எந்தக் கேள்விகள் அடிக்கடி வருகின்றன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ளலாம். 

புத்தகங்களை வாசித்தல்

கதை, கவிதை , கட்டுரை, பொன்மொழிகள் போன்ற பல்வேறு புத்தகங்களை நீங்கள் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிக்கின்ற போது நீங்கள் புதிய விடயங்களை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் மொழி ஆற்றல் அதிகரிக்கும். விடயங்களை வாசித்து கிரகிக்கும் ஆற்றல் வளரும். இதனால் நீங்கள் பரீட்சை எழுதுகின்ற போது நன்றாக வாசித்து கிரகித்து பொருத்தமான மொழிநடையில் விடை எழுதுவதற்கு முடியுமாக இருக்கும். 

பாடங்களை தொலைபேசியில் பதிவு செய்தல்

தற்காலத்தில் அநேகமானோரிடம் தொலைபேசிகள் காணப்படுகின்றது. அவற்றில் குரலைப் பதிவு செய்யும் வசதிகள் காணப்படும். உங்களுக்கு கடினமான பாடங்களை அல்லது மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய பாடங்களை உங்கள் குரலில் வாசித்துப் பதிவு செய்து கொள்ள முடியும். பின்னர் நீங்கள் படிக்கும் நேரம், ஓய்வாக இருக்கும் நேரம் ஏன் சாப்பிடும் நேரத்தில் கூட அவற்றைக் கேட்க முடியும். 



கல்வி நிகழ்ச்சிகளைப் பார்வையிடல்

யூடியுப் போன்ற சமூக வலைத்தளங்களில் பாடங்களுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு காணொளிகள் காணப்படுகின்றன. அவற்றை முறையாக பார்வையிடுவது உங்களுக்கு மேலதிக அறிவையும் தெளிவையும் ஏற்படுத்தும்.  சில மாணவர்கள் தேவையற்ற விடயங்களுக்காக யூடியுப்பைப் பயன்படுத்துகின்றார்கள். அவ்வாறல்லாமல் நீங்கள் தேவையான விடயங்களைப் பார்த்து விட்டு தொலைபேசிகளை, கணினிகளை பெற்றோரின் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும்.


தம்பி தங்கையருக்குக் கற்பித்தல்

உங்கள் வீடுகளிலுள்ள தம்பி தங்கையருக்கு நீங்கள் கற்பிப்பதன் மூலம் நீங்கள் அந்தப் பாடத்தில் தெளிவை அடையலாம். உதாரணமாக நீங்கள் உங்கள் தம்பிக்கு ஆங்கிலம் கற்பிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் உங்களையறியாமலே புதிய விடயங்களை சுயமாகக் கற்பீர்கள். கற்பிக்கக் கற்பிக்க உங்கள் அறிவு வளர்ச்சியடையும். ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சியைப் பெற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய ஆங்கிலப் பரீட்சையிலே நீங்கள் நல்ல பெறுபேற்றைப் பெறுவீர்கள்.




தொடர்ச்சியாகப் படிக்காமல் ஓய்வு எடுத்துப் படித்தல்

தொடர்ச்சியாகப் படிக்கின்ற போது எமது மூளை களைப்படையும். அலுப்பு ஏற்படும். எனவே மணித்தியாலக் கணக்கில் படிக்காமல் நேரமொதுக்கிப் படிக்க வேண்டும். உதாரணமாக  அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை பத்து நிமிடங்கள் ஒய்வெடுத்து விட்டு பின்னர் மீண்டும் படிப்பைத் தொடரலாம். 

ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம்

நாம் நன்றாகப் படிப்பதற்கு, ஏனைய வேலைகளைச் செய்வதற்கு உடல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். பசியோடிருந்து படிக்கக் கூடாது. அத்துடன் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். 

அரசாங்கம் கல்விக்காக அதிகமாகச் செலவிடுகின்றது. இலவசக் கல்வியை உங்களுக்கு அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. என்னுடைய பிள்ளை படித்து நன்றாக வரும் என்று உங்கள் பெற்றோர்கள் உங்களுடைய எதிர்காலம் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள். 

எனவே உங்களுக்காகவும் உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் நாட்டிற்காகவும் நீங்கள் மேற்கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற எமது ulahavalam.com (உலக வலம்) இணையத்தளம் மூலமாக வாழ்த்துகின்றோம். 

***********************************************************************************


க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பொதுச் சாதாரண பரீட்சைக்கான பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள் மாதாந்த அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள இணைப்பினூடாக அவற்றைப் பார்வையிடலாம். ஏனைய போட்டிப் பரீட்சைகளில் கலந்து கொள்வோரும் இந்த இணைப்புக்கள் மூலம் சென்று நடைமுறை நிகழ்வுகளைப் படித்துக் கொள்ளலாம்.

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை