ஆசிரியப் பணி என்பது புனிதமான பணியாகும். அது தியாகங்கள் நிறைந்தது. எனினும் ஆசிரியர் பணி பற்றி சமூகத்தில் பல்வேறு தப்பபிராயங்கள் நிலவுகின்றன. இலங்கையை பொறுத்தவரையில், வெறும் ஏழு முப்பதிலிருந்து ஒன்று முப்பது வரையான நேரப் பகுதியில் நடைபெறுகின்ற சாதாரண ஒரு பணி போன்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனவே ஒரு ஆசிரியர் பாடசாலையில் என்னென்ன பணிகளைச் செய்கின்றார் என்பது சம்பந்தமான விரிவான ஒரு பதிவாக இந்த பதிவு காணப்படுகின்றது. இந்த பதிவை நீங்கள் வாசித்து முடிந்தவுடன் ஆசிரியரின் முன்னால் காணப்படுகின்ற இமாலய பணிகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
முதலில் ஒரு ஆசிரியருக்கு நியமனம் வழங்கப்படுகின்ற போது அவருக்கு பெரும்பாலும் அவர் வாழுகின்ற அல்லது அவருடைய சொந்த பிரதேசத்தில் கிடைப்பதில்லை. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்தில் கிடைக்கின்றது. அல்லது ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்தில் கிடைக்கின்றது. எனவே அவர் மிகுந்த செலவு செய்து நண்பர்கள் குடும்பங்களை பிரிந்து, தனித்திருந்து தன்னுடைய ஆசிரியர் பணியை செய்ய வேண்டும். சில பாடசாலைகளில் தூரப் பிரதேசங்களில் வேலை செய்வதற்கான கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள முடியும். சில பாடசாலைகளுக்கு அவ்வாறான நிலவரங்கள் இல்லை. எனவே இப்படியான நிலையில் இருந்து பாடசாலைக்கு வரவேண்டும். சிலர் வீடுகளில் இருந்து செல்வார்கள். ஆனால் அவர்களின் வசிப்பிடத்திற்கும் பாடசாலைக்கும் இடையிலான தூரம் அதிகமாகக் காணப்படும். அதாவது ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை மணித்தியாலம் பிரயாணம் செய்துதான் பாடசாலைக்கு செல்வார்கள். இவ்வாறான பிரயாணங்களுக்கான செலவை ஆசிரியர்கள்தான் ஈடு செய்ய வேண்டியிருக்கிறது. இந்த விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்த விடயம் தான் காலை ஏழு முப்பதுக்கு தான் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்கின்றார்கள் என்பதாகும். அநேகமான ஆசிரியர்கள் 7:30க்கு முன்னர் பாடசாலைக்கு சென்று விடுகின்றார்கள். பாடசாலையின் சுத்தம் சம்பந்தமான பொறுப்புகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அதைப்போல் ஏனைய ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.அதனால் ஏழு முப்பதுக்கு முன்னர் அதாவது ஆறு மணி ஆறு முப்பதுக்கெல்லாம் பாடசாலைக்கு வருகின்ற அதிபர் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.
அதனைத் தொடர்ந்து வகுப்பறையில் பாடங்கள் ஆரம்பிக்கின்றன. வகுப்பாசிரியர்கள் தமக்குரிய வகுப்புக்களுக்கு செல்வார்கள். ஏனைய ஆசிரியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பொறுப்புகளை செய்வார்கள். வகுப்பு ஆசிரியர்கள் வழக்கமான பாட கற்பித்தல் பணிகளுக்கு மேலதிகமாக மாணவர் வரவு இடாப்பு பதிதல், வரவு இடாப்பில் மாதாந்த சுருக்கத்தை செய்தல், அதேபோல் பாடப் பதிவுப் புத்தகத்தில் ( Record Book) மாணவர் தகவல்களை சேர்த்தல், அதில் வாராந்த சுருக்கம் எழுதுதல் போன்ற விடயங்களைச் செய்கின்றார்கள்.
இலவசப் பாடநூல்கள், இலவசச் சீருடைகள் போன்றவற்றை வழங்கல், அது தொடர்பான தகவல்களைப் பதிந்து வைத்தல், பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுதல், அது தொடர்பான பற்றுச்சீட்டுகளை வழங்குதல், மாணவர்களுக்கான போஷாக்கு மாத்திரைகளைப் பங்கிடல், தவணைப் பரீட்சை முடிவில் மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை (Reports) தயாரித்து வழங்குதல், பெற்றோர்களுக்கான கூட்டங்களை நடத்துதல் (Parents Meeting) என பல்வேறு பணிகள் வகுப்பாசிரியர்களின் கடமையாக காணப்படுகின்றது
பாட ஆசிரியர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேர சூசிகளின் படி பாட வேளைகள் ஆரம்பிக்கும் போது வகுப்பறைக்கு செல்ல வேண்டும். பல்வேறுபட்ட பின்னணிகளுடன் வருகின்ற மாணவர்களுக்கு அவர்களை வழிப்படுத்தி, அவர்களுடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி பாடத்தை கற்பிக்க வேண்டியவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஒழுக்கவியல் சம்பந்தமான போதனைகளை வழங்குவதுடன் பாடரீதியான விளக்கத்தினையும் மாணவர்களுக்கு புரியும் வகையில் நடத்துகின்றார்கள். மாதிரி பரீட்சைகள், அலகுப் பரீட்சைகள், தவணைப் பரீட்சைகள் போன்றவற்றை நடாத்த வேண்டும். அதற்குரிய பரீட்சை தாள்களை மதிப்பிடுதல் போன்ற பணிகளையும் செய்ய வேண்டி இருக்கின்றது. குறைவான புள்ளிகளை பெறுகின்ற மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளையும் நடத்த வேண்டும். மேலதிக விளக்கங்களை வழங்க வேண்டும்.
பரீட்சை தாள்களை தயாரிப்பதும் அதிகமான ஆசிரியர்களின் பணியாக இருக்கின்றது. தங்களுடைய பாடங்களுக்குரிய பரீட்சை தாள்களை தயாரித்து அதனுடைய பிரதான பிரதியினை பாடசாலைக்கு கையளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே இவர்கள் பாட நேரத்தில் அதாவது ஏழு முப்பதிலிருந்து ஒன்று முப்பதுக்குள் இந்த வேலைகளை செய்ய முடியாது. அவர்கள் வீடுகளில் அல்லது வசிப்பிடங்களில் இருந்து தங்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் இருந்து தான் இந்த பரீட்சை தாள்களை தயாரிக்க வேண்டிய துரதிஷ்டம் இருக்கின்றது. தங்களுடைய கடமையை நேரத்தையும் தாண்டி இவர்கள் இந்த பணியை செய்கின்றார்கள்.
அத்துடன் வகுப்பறைக் கற்பித்தல் பணிக்கு மேலதிகமாக, பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்ற போது இல்லப் பொறுப்பாசிரியராக, இல்ல ஆசிரியர்களாக இருந்து பல்வேறு பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்றது. போட்டி நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களை தயார்படுத்தல், பயிற்சி வழங்குதல், விளையாட்டுக்களில் கலந்துகொள்ள செய்தல் போன்ற விடயங்களை செய்ய வேண்டும். எனவே இல்ல விளையாட்டுப் போட்டிகளை பொறுத்த வரையிலே கால நேரம் பார்க்காது மாணவர்களுக்காக தியாகத்துடன் பணியாற்ற வேண்டியிருக்கின்றது.
அத்துடன் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள், வலய மட்டப் போட்டிகள், மாகாண, தேசிய மட்டப் போட்டிகள் போன்றவை நடக்கின்ற போது கூட ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானதாக காணப்படுகிறது.
பண்புசார் விருத்தி என்ற தலைப்பிலே ஒரு செயற்றிடம் காணப்படுகின்றது. பாடசாலையில் காணப்படுகின்ற ஒட்டுமொத்த விடயங்களையும் 8 தலைப்புகளின் அடிப்படையில் பிரித்து ஒவ்வொரு தலைப்புக்கும் ஒவ்வொரு ஆசிரியர் குழு நியமிக்கப்படுகின்றது. அந்த ஆசிரியர் குழு தமக்கு வழங்கப்பட்ட தலைப்பின் கீழ் விடயங்களை ஆராய்ந்து அதற்குரிய குறிப்புகளை எழுதிக் கொள்கின்றார்கள். மாணவர் அடைவு, கற்றல் - கற்பித்தல் மதிப்பீடு, முறையான கலைத் திட்ட முகாமைத்துவம், இணைப்பாட விதான செயற்பாடுகள், தலைமைத்துவமும் முகாமைத்துவமும், மாணவர் நலன்புரி, பௌதீக வள முகாமைத்துவம், பாடசாலையும் சமூகமும் ஆகிய 08 துறைகளே அவையாகும். ஒவ்வொரு தலைப்பிலும் அதிகமான உட் பிரிவுகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு பௌதீக வள முகாமைத்துவத்தை எடுத்துக் கொண்டால், அதனோடு சம்பந்தப்பட்ட பல்வேறு உப பிரிவுகள் காணப்படுகின்றன.
பாடசாலையில் வைத்து மாணவர்களுக்கு திடீர் சுகவீனங்கள் ஏற்படுகின்ற போது அல்லது விபத்துக்கள் ஏற்படுகின்ற போது பாடசாலை ஆசிரியர்களே முதலுதவிகள் வழங்குகின்றார்கள். சுகவீனப்பட்ட மாணவர்களை வைத்தியசாலைக்கும் ஆசிரியர்கள் கொண்டு செல்கின்ற சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. பெற்றோருக்கும் இது தொடர்பாக ஆசிரியர்கள் அறிவித்தல் வழங்குகின்றார்கள். தான் ஒரு ஆசிரியர் என்பதை தாண்டி ஒரு இரக்கமுள்ள தந்தையாக, தாயாக இருந்து ஆசிரியர்கள் இந்த பணியை தியாகத்துடன் செய்கின்றார்கள்.
அத்துடன் பாட ஆசிரியர்களைப் பொறுத்தவரையிலே பெரும்பாலும் கணிப்பீடுகளை செய்ய வேண்டும். பெரும்பாலும் தவணையில் ஒரு பாடத்திற்கு ஒரு கணிப்பீடு காணப்படுகின்றது அந்த கணிப்பீடுகளை செய்து அந்த கணிப்பீட்டு புள்ளிகளை அதற்குரிய படிவத்திலே பதிய வேண்டும். இதுவும் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய ஒரு கட்டாயமான பணியாக காணப்படுகிறது.
அத்துடன் பாடசாலையில் பல்வேறுபட்ட குழுக்கள் காணப்படுகின்றன. ஒழுங்கு கட்டுப் பாட்டுக் குழு மாணவர்களின் ஒழுக்கத்திற்குப் பொறுப்பாகக் காணப்படும். பரீட்சைக் குழு பரீட்சைகளை நடாத்துதல், பரீட்சைத் தாள்களை பிரதி செய்தல், விநியோகித்தல் போன்ற பரீட்சையுடன் தொடர்புடைய பணிகளைச் செய்யும். சுற்றுலாக் குழு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும். விளையாட்டுக் குழு இல்ல விளையாட்டுப் போட்டியை மிகுந்த அர்ப்பணிப்புடன் நடாத்தி முடிக்கும். பாடசாலை அபிவிருத்திச் சங்க குழு, முகாமைத்துவக்குழு, கொள்வனவுக் குழு என்று இன்னும் பல்வேறுபட்ட குழுக்கள் காணப்படுகின்றன. இந்த குழுக்களில் இருக்கின்ற ஆசிரியர்களுக்கு அவர்களுக்கே உரிய தனித்தனியான பொறுப்புக்கள் காணப்படுகின்றன. அந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அது தொடர்பான ஆவணங்களை பேண வேண்டும்.
பாடசாலையின் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக பாடசாலையினுடைய ஒரு கணக்காளர் ஒருவர் காணப்படுவார். அவரும் ஒரு ஆசிரியராக காணப்படுவார். அந்த ஆசிரியர் தான் அந்த பாடசாலையின் கணக்கு வழக்குகளையும் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. பற்றுச் சீட்டுக்களைப் பேண வேண்டியிருக்கிறது. வங்கியுடன் தொடர்புபட்ட வேலைகளையும் செய்ய வேண்டும்.
தவணைக் குறிப்பு, பாடக் குறிப்பு போன்றவற்றை எழுத வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. இது ஒரு கட்டாயமான பணியாக கொள்ளப்படுகின்றது. ஒரு தவணையில் கற்பிக்க வேண்டிய விடயங்களை முன் கூட்டியே சுருக்கமாகத் திட்டமிட்டு எழுதிக் கொள்ள வேண்டும். இது தவணைக் குறிப்பாகும். தவணைக் குறிப்பின் விரிவான வடிவமே பாடக் குறிப்பாகும். வகுப்பறையில் நாம் கற்பிக்க வேண்டிய விடயங்களை இதில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பலர் நினைப்பது போல் ஆசிரியர் பணி என்பது ஏழு முப்பதிலிருந்து ஒன்று முப்பது வகையான காலப்பகுதி அல்ல கற்பிப்பதற்கு முன்னர் அல்லது வகுப்பறைக்கு செல்வதற்கு முன்னர் பல்வேறுபட்ட முன் முன்னாயத்தங்களை செய்ய வேண்டியிருக்கிறது.
வழக்கமாக ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் அதற்குரிய விண்ணப்ப படிவுத்தினை அதிபர் கையொப்பத்துடன் பாடசாலையில் ஒப்படைக்க வேண்டும். அதாவது ஆசிரியர் விடுமுறைக்கு பொறுப்பான ஆசிரியர் அல்லது உத்தியோகத்தர்கள் அந்த ஆசிரியர்களுடைய விடுமுறைகளை பதிய வேண்டும். அதற்குரிய புத்தகம் காணப்படுகின்றது. ஒவ்வொரு ஆசிரியரும் எடுத்த விடுமுறைகளை பதிவதற்குபெரும்பாலும் ஒவ்வொரு பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் அந்த பக்கங்களிலேயே குறிப்பிட்ட ஆசிரியர்கள் அந்த வருடத்தில் எடுத்த விடுமுறைகள் தொடர்ச்சியாக பதியப்படும். அதேபோல் ஆசிரியர்களுடைய வரவுகளை குறைப்பதற்கும் தனியே வரவு இடாப்பு பயன்படுத்தப்படுகிறது. அதிலும் அந்த குறிப்பிட்ட ஆசிரியர்களுடைய அன்றைய வரவினை பதிவு செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு காணப்படுகின்றது.
வழக்கமாக மாணவர்களுக்காக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த போட்டி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை தெரிவு செய்தல், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பயிற்றுவித்தல், அவர்களை போட்டிகளுக்கு அழைத்தல் செல்லல் என்பன அந்தந்த பாடங்களுக்கு அல்லது அந்தந்த போட்டிகளுக்கு பொறுப்பான ஆசிரியர்களின் கடமையாக காணப்படுகின்றது. சமய ரீதியான போட்டிகள், தமிழ் மொழி தின போட்டிகள், சமூக விஞ்ஞான போட்டிகள், சித்திரப்போட்டிகள், மற்றும் ஒலிம்பியாட் போட்டி என்று பல்வேறுபட்ட போட்டி நிகழ்ச்சிகள் பாடசாலை மட்டம், மாவட்டம் மட்டம், மாகாண மாகாண மட்டங்களில் நடாத்தப்படுகின்றன. எனவே இந்த போட்டிகளை ஒருங்கிணைப்பு செய்து அதற்குரிய பணிகளைச் செய்வதும் ஆசிரியர்களுடைய கடமையாக காணப்படுகின்றது.
பாடசாலை ஆசிரியர் குழுக் கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். இந்த கூட்டங்களின் குறிப்புகளை எழுதுவதற்கு ஆசிரியர் ஒருவர் காணப்படுவார். அவர் கூட்டங்கள் நடக்கின்ற போது அந்த கூட்டங்களில் குறிப்பிடப்படுகின்ற விஷயங்கள் அதாவது கூட்டக் குறிப்புகளை எழுதி ஆவணப்படுத்தி அதிபரின் ஆசிரியருடைய கையொப்பத்தையும் பெற வேண்டிய தேவை இருக்கின்றது
எனவே ஒட்டு மொத்தமாக தொகுத்து நோக்குகின்ற போது ஆசிரியப் பணி என்பது கால நேர வரையறையற்றதாகவும், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் நிறைந்ததாகவும் சமூக நோக்குக் கொண்டதாகவும் அவப் பழிகளைத் தாங்கிக் கொள்வதாகவும் காணப்படுகின்றது.
Images were downloaded from various websites.