தைகிரிஸ் நதி. அது ஈராக்கில் இருக்கிறது.இந்த தைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையிலுள்ள மொசுல் நீர்த்தேக்கம் அங்கு ஏற்பட்ட வரட்சி காரணமாக வற்றியது. நீர் மட்டம் குறைந்ததால் நீருக்குள் அமிழ்ந்து காணப்பட்ட நகரமொன்றின் இடிபாடுகள் வெளித்தெரிய ஆரம்பித்தன.
அந்த நகர இடிபாடுகளுள் அரண்மனையொன்றின் சிதைவுகளும் முக்கியமானது. இந்த அரண்மனை 3400 வருடங்கள் பழைமை வாய்நதது என்று அறிய வருகின்றது.
இது மண் செங்கல் மூலமாக கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை 20 மீற்றர் உயரம் வரை காணப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. இந்த அரண்மனையின் சுவர்கள் 6 அடி உயரமுடையவையாகக் காணப்படுகின்றன. சில சுவர்கள் 6 அடிக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்டிருந்தன.
இந்த அரண்மனையினுள்ளே மிகப் பாரிய அளவிலான அறைகள் காணப்பட்டிருக்கின்றன. சுவர்களில் சிவப்பு, நீல நிறங்கள் தீட்டப்பட்ட சுவரோவியங்கள் காணப்பட்டிருக்கின்றன.
களிமண் தட்டுக்கள் 10 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பண்டைக் கால மொசப்பத் தேமியாவில் இவ்வாறான களிமண் தட்டுக்களில் எழுதுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்தப் பத்து களிமண் தட்டுக்களும் ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கி.மு 15 தொடக்கம் கி.மு 14 வரையான காலப்பகுதியில் வட மொசப்பத்தேமியா மற்றும் சிரியா போன்ற பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த மிட்டனி பேரரசுக்குச் சொந்தமானதாக இந்த அரண்மனை இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.




