ஜப்பானிய கல்விமுறை

 


சுறுசுறுப்புக்குப் பெயர் போனவர்கள் ஜப்பானியர்கள். உற்பத்தித் துறையிலும் முன்னேறியவர்கள் ஜப்பானியர்கள். அவர்களின் கல்வி நிலை எவ்வாறு காணப்படுகிறது என்பதை ஆராய்கிறது இந்தப் பதிவு.

பிரிவுகள்

ஜப்பானின் பாடசாலைகளைப் பொறுத்த வரை 03 வகையான வகுப்புக்கள் காணப்படுகின்றன. ஆரம்ப நிலை வகுப்பு கள் , இடை நிலை வகுப்புகள், உயர் நிலை வகுப்புகள் என்பனவே அவை. 

ஆரம்ப நிலை வகுப்புக்கள் 06 வருடங்களைக் கொண்டது. இடைநிலை வகுப்புக்கள் 03 வருடங்களைக் கொண்டது. உயர் நிலை வகுப்புக்கள் 03 வருடங்களைக் கொண்டது. உயர் நிலை வகுப்புக்களுக்கு பரீட்சை மூலமே நுழைய முடியும். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக கல்வி முறை காணப்படுகிறது.  பரீட்சை மூலமே பல்கலைக் கழகத்திற்கு நுழைய முடியும்.

ஆரம்ப நிலை 06 வருடங்களும் இடைநிலை 03 வருடங்களும் கட்டாயக் கல்விக்குரிய வகுப்புக்களாகும். எனினும் 98.8 வீதமான மாணவர்கள் உயர் நிலை கல்வியைப் பெறுகின்றனர். 

ஆறு வயதில் ஆரம்பப் பிரிவுக்கு ஜப்பானியப் பிள்ளைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். ஏப்ரல் மாதத்தில் ஆரம்ப நிலைப் பாடசாலைகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். பாடசாலைகள் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து மார்ச் மாதத்தில் முடிவடைகின்றன. 

நேரசூசி

ஜப்பானிய பாடசாலைகள் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறுகின்றன. சனிக்கிழமைகளில் நடைபெறுகின்ற பாடசாலைகளும் காணப்படுகின்றன. இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்பு பாடசாலைகளில் ஒரு நாளைக்கு 50 நிமிடங்களைக் கொண்ட06 பாட வேளைகள் காணப்படுகின்றன. பாடசாலை முடிவடைந்ததும் மாணவர்கள் தமது வகுப்பறைகளை சுத்தம் செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து கழக செயற்பாடுகள் நடைபெறும். 

கற்பிக்கப்படும் பாடங்கள்



ஆரம்பப் பாடசாலைகளில் ஜப்பான் மொழி , கணிதம், விஞ்ஞானம், சமூகக் கல்வி, இசை, கைப்பணிப் பொருட்கள் செய்தல், சுகாதாரம், சமையல், தையல், ஆங்கிலம் போன்ற விடயங்களைக் கற்கின்றனர். ஆங்கிலத்திற்கு மேலதிகமாக சீனம், பிரான்ஸ், கொரிய மற்றும் ஜேர்மன் ஆகிய மொழிகளையும் மாணவர்கள் கற்கின்றனர்.

ஆரம்பப் பிரிவின் ஒவ்வொரு பாடத்திற்கும் எத்தனை பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை கீழுள்ள அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

கல்விக்காக தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதிகமான பாடசாலைகள் இணைய வசதியுடன் காணப்படுகின்றன. 

சூடோ (Shodo) எனப்படுகின்ற ஜப்பானிய எழுத்தலங்காரம்(/Japanese calligraphy), ஹைக்கூ போன்ற விடயங்களும் கற்பிக்கப்படுகின்றன. 



கழகங்கள் (Clubs) 

அதிகமான இடைநிலைப் பாடசாலைகளில் பல்வேறு சங்கங்கள் காணப்படுகின்றன. விஞ்ஞான கழகங்கள் , விளையாட்டு கழகங்கள் , இசை தொடர்பான கழகங்கள் , கலை தொடர்பான கழகங்கள் காணப்படுகின்றன. பேஸ்போல் கழகங்கள், உதைப்பந்தாட்ட கழகங்களும் காணப்படுகின்றன. ஜூடோ கழகங்களும் காணப்படுகின்றன. டெனிஸ், கூடைப்பந்து, வலைப்பந்து, ஜிம்னாஸ்டிக் போன்றவற்றுடன் தொடர்புபட்ட கழகங்களும் காணப்படுகின்றன. 

பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள், பிராந்திய மட்டத்திலான போட்டிகள் போன்றவற்றிலும் மாணவ்ர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் Go Club எனப்படுகின்ற கழகமும் காணப்படுகின்றது. Go எனப்படுவது கறுப்பு, வெள்ளை கற்களைப் பயன்படுத்தி விளையாடப்படும் ஒரு (Board Game) விளையாட்டாகும்.



ஓவியக் கழகங்கள் (Art Clubs), பாடலுடன் சம்மந்தப்பட்ட கழகங்கள்(Choir Clubs), Brass Band சம்மந்தப்பட்ட கழகங்கள், பூக்களை ஒழுங்குபடுத்தல்(Flower Arrangment/Kado), தேயிலையுடன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்(Tea Ceremony/Sado), ஜப்பானிய வாட் பயிற்சி (kendo/Japanese swordsmanship) போன்றவையும் நடைபெறுகின்றன.




உணவு முறை

ஆரம்பப் பிரிவு வகுப்புக்களிலுள்ள மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அந்தக் குழுக்கள் சுத்தம் செய்தல், சக மாணவர்களுக்கான உணவைப் பங்கிடுதல் போன்ற விடயங்களை ஒற்றுமையுடன் செய்கின்றனர். அதிகமான ஆரம்பப் பிரிவு பாடசாலைகளில் பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர்.




பாடசாலை உணவு நிலையங்கள் (School Lunch Center) மூலம் தயாரிக்கப்பட்ட போஷாக்கான உணவுகளை உண்ணுகின்றனர். மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து சுழற்சி முறையில் உணவவை பங்கிடும் பணிகளில் ஈடுபடுகின்றனர். 


அதிகமான ஆரம்பப் பிரிவு பாடசாலைகளில் வாரத்தில் ஒரு முறையேனும் மாணவர் குழுக்கள் தாமாகவே சமைத்து மற்ற மாணவர்களுக்கு பகிர்கின்றனர். 


பாடசாலைகளில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. விளையாட்டு விழா, வரலாற்று இடங்களுக்கான விஜயங்கள், கலை , கலாசார நிகழ்வுகள் போன்ற விடயங்கள் நடைபெறுகின்றன. 

ஆரம்ப பிரிவின் உயர் வகுப்பு மாணவர்கள், இடைநிலை வகுப்பு மாணவர்கள், உயர் நிலை மாணவர்கள் இணைந்து கல்விச் சுற்றுலா செல்கின்றனர். கலாசார முக்கியத்துவம் வாய்ந்த Kyoto, Nara போன்ற நகரங்கள், Ski Resort போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்கின்றனர். 

ஜப்பானிய கல்வி முறை பற்றிய சில விடயங்களை இந்த பதிவின் மூலமாக அறிந்து கொண்டோம். மற்றுமொரு பதிவில் இன்னும் பல விடயங்களுடன் சந்திப்போம். 







கருத்துரையிடுக

புதியது பழையவை