உலக வரலாற்றில் மிகச் சிறிய போர்

 


உலக வரலாறு நெடுகிலும் பல்வேறு யுத்தங்கள் காணப்படுகின்றன. சிறிய யுத்தங்கள் முதல் நூற்றாண்டுகளாக தொடர்ந்த யுத்தங்களும் காணப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய பதிவில் உலக வரலாற்றில் நடைபெற்ற மிகச் சிறிய யுத்தமொன்றைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகின்றோம். 

ஸன்ஸிபார்  (Zanzibar) எனப்படுவது தன்ஸானியாவுடன் இணைந்திருக்கும் ஒரு தீவு.


1890 ஆம் ஆண்டிலே பித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. ஸன்ஸிபார் அரசு பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்குமென்றும் தன்ஸானியாவின் ஏனைய பிரதேசங்கள் ஜேர்மனியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமென்றும் அந்த ஒப்பந்தம் சொன்னது.

ஸன்ஸிபார் அரசின் சுல்தானாக ஹமாத் பின் துவைனி 1893 ஆம் ஆண்டளவில் பதவியேற்றார்.  மூன்று வருட நல்லாட்சியின் பின்னர் சுல்தான் ஹமாத் பின் துவைனி (Hamad Bin Thuwaini) மரணமடைந்தார். அதனையடுத்து அவருடைய மச்சினன் காலித் பின் பர்கேஷ் (Khalid Bin Bhargash) சுல்தானாகப் பதவியேற்றார். பிரித்தானியாவுக்கு எந்த வித முன்னறிவித்தலுமின்றியே இவர் பதவியேற்றார். இதனை பிரித்தானியா ஏற்றுக் கொள்ளவில்லை. பிரித்தானியா பல தடவைகள் முன்னெச்சரிக்கை விடுத்தது. எனினும் காலித் பிரித்தானியாவின் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கைகளை கவனத்திற் கொள்ளாமல் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தார். . எனவே பிரித்தானியா ஸன்ஸிபார் அரசுக்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்தது. 27 ஆகஸ்ட் 1896 அன்று 3000 வீரர்களைக் கொண்ட காலித்தின் கோட்டையை பிரித்தானியா தாக்கியது. கப்பல்கள், யுத்தப் படகுகள் மற்றும் நூற்றுக் கணக்கான வீரர்களுடன் இந்தத் தாக்குதலை பிரித்தானியா நடாத்தியது.  


ஆனால் யுத்தம் ஆரம்பமாகிய போது காலித் பின் பர்கேஷ்  இரகசிய வழியொன்றின் மூலமாக தப்பிச் சென்றார். அவருடைய வீரர்கள் தொடர்ச்சியாக யுத்தத்தில் ஈடுபட்டனர். எனினும் ஸன்ஸிபார் அரசின்  கொடி பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிற்கு வந்ததையடுத்து யுத்தம் நிறைவு பெற்றது. 



வெறும் 38 நிமிடங்கள்தான் இந்த யுத்தம் நடைபெற்றது. எனினும் இந்த யுத்தத்தில் ஐநூறுக்கு மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். பல நூற்றுக் கணக்கான வீரர்கள் காயமடைந்தனர். காலித் பின் பர்கேஷ் தன்ஸானியாவுக்கு தப்பிச் சென்று ஜேர்மனி கடற்படையின் பாதுகாப்பில் இருந்தார். எனினும் பின்னர் அவர் பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டார். அதனையடுத்து ஸன்ஸிபாரின் ஆட்சியாளராக பிரித்தானியா ஆதரவாளரான சுல்தான் ஹமூத் பின் முஹம்மத் பதவியேற்றார். 


Zanzibar, Tanzania

ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை