உலகின் மிகப் புராதன போலிக் கண்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் போலிக் கண்களைப் பயன்படுத்தியிருந்தமை பற்றி நீங்கள் அறிவீர்களா? ஆம் . ஈரானில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களில் போலிக் கண் இருந்தமை பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு பெண்ணொருவரின் எலும்புக்கூடொன்று ஈரானில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் செயற்கைக் கண்ணொன்று கண் குழியில் பொருத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு 2900 - கி.மு 2800 காலப்பகுதியில் இது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

தெற்கு ஈரானிலே Shahr-e Sukhteh (The Burnt City) எனப்படுகின்ற தொல்பொருள் பிரதேசம் காணப்படுகின்றது.


கி.மு 3200 ஆம் ஆண்டிலிருந்து இது பலமுறை எரிந்ததாகவும்  கி.மு 2350 ஆம் ஆண்டு காலப்பகுயில் இந்த நகரம் மக்களினால் கைவிடப்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரத்திலிருந்தே செயற்கைக் கண்ணுடன் கூடிய எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இயற்கையான தார் மற்றும் மிருகக் கொழுப்பால் இது ஆக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தார் மற்றும் கொழுப்பால் ஆக்கப்பட்டதால் இது அக்காலத்தில் ஈரலிப்பாகவும் நீடித்த ஆயுள் கொண்டதாகவும் காணப்பட்டது. அரை மில்லி மீற்றருக்கும் குறைவான தடிப்பத்தில் தங்க இழைகளால் ஆக்கப்பட்ட குழாய்களும் இதில் காணப்படுகின்றன. டயமன்ட் வடிவ கருவிழியை உருவாக்கும் வகையில் சமாந்தரமான கோடுகளால் சுற்றப்பட்ட கண்மணியானது முன்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கண் உருண்டையின் இருபுறமும் தங்க இழையுடன் கூடிய துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்ணானது வெளியே விழுந்து விடாமல் இந்த இழைதான் பாதுகாத்தது. கண்கள் நகருவதற்காகவும் இந்த இழைகள் உதவின. குறித்த பெண்மணி உயிருடன் இருந்த வேளையில்தான் இந்த போலிக் கண் பொருத்தப்பட்டிருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


நகைகளின் மணிகள் மற்றும் நகைகளின் துண்டுகள், தோல் சாக்கு, வெண்கல கண்ணாடி போன்றவையும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இவர் உயர் குலப் பெண்மணியாக இருந்திருக்கலாம் என்று கருத முடிகிறது. 

இந்தக் கண்ணைச் செய்தவர் கண் அமைப்பு பற்றி நன்கறிந்தவராக இருந்திருக்க முடியும் என்று கருத முடிகிறது. அத்துடன் கண்ணில் வெள்ளை நிற அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் கண்ணின் வெள்ளைப்பகுதி நிறந் தீட்டப்பட்டிருந்தமை பற்றியும் அறிய முடிகிறது. 

***

ஆங்கில இணையத் தளங்களில் வந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை ஆக்கப்பட்டடுள்ளது.

இந்தக் கட்டுரையின் காணொளி வடிவத்தைப் பார்வையிட கீழே க்ளிக் செய்யுங்கள். 

கருத்துரையிடுக

புதியது பழையவை