அலக்ஸாண்டர் உலகம் போற்றும் மாவீரனாவான். மசிடோனியாவைச் சேர்ந்த இவன் தன்னுடைய படைப்பலத்தால் உலகையே மசிடோனியாவை திரும்பிப் பார்க்கச் செய்தான்.மேற்கில் கிரேக்கம் முதல் கிழக்கில் இந்தியா வரை இவனுடைய பலம் பரவியிருந்தது. டைர் எனப்படும் தீவை இவன் கைப்பற்றியது வரலாற்றில் முக்கியமான அம்சமாகும்.
பாரசீகத்தை தோற்கடித்த அலெக்ஸாண்டர் எகிப்தை நோக்கி வரும் வழியில் கரையோர நகரங்கள் சிலவற்றையும் கைப்பற்றினான். பின்னர் டைர் (Tyre) நகரை நோக்கி முன்னேறினான்.
டைரின் பழைய நகரம் லெபனான் கரையில் அமைந்திருந்தது.
அதனுடைய புதிய நகரம் கரையிலிருந்து 800 மீற்றர் தொலைவில் தீவொன்றில் அமைந்திருந்தது.
இந்தத் தீவானது பலமான சுவர்கள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
கரையோர நகர் கைப்பற்றப்பட்ட பின்னர் டைர் தீவை சரணடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அலெக்ஸாண்டரின் தூதுவர்கள் கொலை செய்யப்பட்டனர். எனவே டைர் தீவை நோக்கி பாதை அமைத்து அதனைக் கைப்பற்றும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
தீவை நோக்கி இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டன. பாதுகாப்புக் கோபுரங்கள் இரண்டு அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அந்தப் பாதுகாப்புக் கோபுரங்கள் 50 மீற்றர் உயரமாக காணப்பட்டன. எனினும் டைர் நகரத்தினர் பழைய படகுகளில் காய்ந்த விறகு, சல்பர், எண்ணை போன்றவற்றை நிரப்பி அந்தப் படகுகளை பாதுகாப்புக் கோபுரங்களில் மோத வைத்து விபத்தை ஏற்படுத்தினர்.
டைர் நகர கப்பல்களும் பாதை அமைக்கும் பணிக்கு இடைஞ்சல்கள் செய்து வந்தன. அத்துடன் முற்றுகைக்குத் தேவையான மரங்களைப் பெறுவதற்காக சென்ற அலக்ஸாண்டரின் படைகள் அரபிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகினர். இதற்கிடையே அலக்ஸாண்டர் தன்னுடைய படைப் பலத்தையும் பெருக்கிக் கொண்டார். ஏழு மாதங்களில் தீவுக்குச் செல்லும் பாதை கட்டி முடிக்கப்பட்டது. பாதுகாப்புக் கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்டன.
பின்னர் தீவின் தென்புறமாக தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு தீவு கைப்பற்றப்ப்டடது. டைர் நகரின் 6000 பேர் கொல்லப்பட்டனர். 2000 பேர் சிலுவையிலறையப்பட்டனர். அலக்ஸாண்டரின் படையில் வெறும் 400 பேரளவில் மாத்திரமே கொல்லப்பட்டனர்.