இஸ்லாமிய உலகின் தலைநகராக இருந்த நகரங்களுள் ஒன்று பக்தாத் நகரமாகும். இது தற்போதைய ஈராக் நாட்டில் அமைந்துள்ளது. இந்த நகரம் அமைப்பில் வட்ட வடிவமாக இருந்ததாக அறிய முடிகிறது.
இந்த நகரமானது நான்காகப் பிரிக்கப்பட்டிருந்தது. நகரின் மத்தியிலிருந்து செல்கின்ற நான்கு நேரான பாதைகளும் நான்கு நுழைவாயில்களையும் சென்றடைகின்றன. நான்கு நுழைவாயில்களும் பஸ்ரா, கூபா, குராஸான், டமஸ்கஸ் ஆகிய நான்கு முக்கிய நகரங்களையும் நோக்கியதாக அமைந்திருந்தன.
பலப்படுத்தப்பட்ட இரட்டைச் சுவர்களையும் சுற்றிவர அகழியையும் கொண்டு பாதுகாப்பாக இந்நகரம் அமைக்கப்பட்டிருந்தது. சுவர்களின் கற்கள் சூளையில் நெருப்பினால் சுடப்பட்டவையாகும். சுவர்களின் தடிப்பு 44 மீற்றர்களாகும்.
நகரின் மத்தியிலே பெரிய பள்ளிவாசலும் கலீபாவின் வதிவிடமான தங்க வாயில் அரண்மனையும் (The Golden Gate Palace) அமைந்திருந்தன. அரண்மனையின் பச்சை நிற குவிமாடம் (Dome) பல மைல் தூரத்திற்கு தெரியக் கூடியதாக இருந்தது. அனுமதியளிக்கப்பட்டவர்கள் மாத்திரமே நகரத்தின் உள் வளையத்திற்குள் செல்லக் கூடியதாக இருந்தது. உள் வளையத்தினுள் அரச குடும்பத்தவர்களின் அரண்மனை, அவர்களின் பணியாளர்களின் வீடுகள், கலீபாவுக்கான சமையலறைகள், குதிரைப்படைக்கான குடியிருப்புகள், அரச அலுவலகங்களும் அமைந்திருந்தன.நகரின் உள் வளையத்தையும் பொதுமக்களின் வசிப்பிடங்கள் இருக்கும் பிரதேசங்களையும் சுவரொன்று பிரித்தது.
அப்பாஸியக் கிலாபத்தின் இரண்டாவது கலீபா அல் மன்ஸ_ர் ஆவார். அப்பாஸிய கிலாபாவுக்கு புதிய தலைநகரம் அவசியம் என்பதை உணர்ந்த அவர் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்வது முதல் நிர்மாணிப்பு வரை இவருடைய வழிகாட்டலில் இடம் பெற்றன. நகரத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தைத் தேடிய கலீபா தைகிரிஸ் நதியில் நீண்ட தூரம் பிரயாணம் செய்தார். தைகிரிஸ் நதிக்கும் யுப்ரடிஸ் நதிக்கும் இடையிலுள்ள ஓர் இடத்தை கலீபா கண்டு பிடித்தார். விவசாயத்திற்குத் தேவையான வளமான மண்ணும் தொடர்ச்சியான தண்ணீர் கிடைக்கும் படியான ஒரு இடத்தை தைகிரிஸ் நதிக்கும் யூப்ரடிஸ் நதிக்கும் இடையில் கண்டுபிடித்தார். சிறந்த வடிவமைப்பாளர்களின் உதவியுடன் நகரத்திற்கான வடிவமைப்பை மிகுந்த சிரத்தையுடன் தானே வடிவமைத்தார் கலீபா.
தொழிலாளர்கள் கரியினால் இந்த நகரத்திற்கான கோடுகளை வரைந்த போது மன்னரே நேரில் சென்று மேற்பார்வை செய்தமை இவரின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
இந்த நகரைக் கட்டியெழுப்புவதற்கு 18 மில்லியன் தங்க தீனார்கள் செலவாகியதாகவும் 1 இலட்சம் நில அளவையாளர்கள், வடிவமைப்பாளர்கள், பொறியியலாளர்கள், தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் கணக்கிட்டுள்ளனர். 1.2 தொடக்கம் 2 மில்லியன் மக்களை உள்ளடக்கியதாக இந்நகரம் அமைந்திருந்தது.
இஸ்லாத்தின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலத்தில் இது தலைநகராக இருந்தது. இந்தக் காலத்தில் அதிக நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதோடு விஞ்ஞான கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டதால் இக்காலம் இஸ்லாமிய உலகின் பொற்காலம் (The Golden Age of Islam) என அழைக்கப்படுகிறது.