அமெரிக்காவின் 18 ஆவது ஜனாதிபதி யுலிஸஸ் கிரான்ட். 1872 ஆம் ஆண்டு ஒரு நாள் இவர் பாதையில் தன்னுடைய குதிரை வண்டியில் மிக வேகமாக பிரயாணம் செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ணுற்ற அப்போது கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரான வில்லியம் வெஸ்ட் என்பவர் ஜனாதிபதியிடம் 'நீங்கள் பாதையில் சட்டத்தை மீறுகிறீர்கள். உங்களுடைய வேகமான பிரயாணம் மற்றவர்களும் வேகமாகச் செல்வதற்கு உதாரணமாக அமைந்து விடும்' என்று எச்சரித்தார். இதன் பிறகு இவ்வாறு நடக்காது என்று ஜனாதிபதியும் உறுதியளித்தார்.
எனினும் மறுநாள் ஜோர்ஜ்டவுன் நகரில் வேகமாக சென்ற போது மீண்டும் அதே பொலிஸ்காரரிடம் ஜனாதிபதி சிக்கிக் கொண்டார்.
'வேகமாக வாகனம் செலுத்துதல் பற்றி நான் நேற்று உங்களை எச்சரித்தேன். ஜனாதிபதி அவர்களே! என்னை மன்னியுங்கள். நீங்கள் நாட்டின் தலைவராக இருந்தாலும் நான் என்னுடைய கடமையை செய்யவேண்டி இருக்கிறது. உங்களை நான் கைது செய்கிறேன்' என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் வாகனத்திலேயே அவர் கொண்டு செல்லப்பட்டார். பொலிஸ் உத்தியோகத்தரான வில்லியம் வெஸ்ட் ஜனாதிபதிக்குப் பக்கத்திலே இருந்து பிரயாணம் செய்தார்.
பின்னர் ஜனாதிபதி தனக்கு விதிக்கப்பட்ட 20 டொலர் தண்டப் பணத்தை செலுத்தினார். அக்காலத்தில் அத்தொகை பெரிய தொகையாக இருந்தது.
அதன் பிறகு ஜனாதிபதி யுலிஸஸ் கிரான்டும் பொலிஸ் உத்தியோகத்தரான வில்லியம் வெஸ்ட்டும் நல்ல நண்பர்களாகினர்.
Source : Internet