உலக நிகழ்வுகள் ஆகஸ்ட் 2018



இலங்கை
------------------
*. புதிய தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன பதவியேற்றுக் கொண்டார்.
*. ஈரல் மாற்று சிகிச்சையொன்று கண்டி வைத்தியசாலையில் முதன் முதலாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
*. ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Ondera )05 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்தார்.
*. பாராளுவமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோல்வியடைந்தது. இந்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டன. எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழுவொன்று சபாநாயகரால் நியமிக்கப்பட்டது. R.M.H.L ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை , கலாநிதி A.S.M. நௌபல் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.
*. இந்து சமுத்திர மாநாடு வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெற்றது. ‘பிராந்தியத்தின் புத்தாக்கத்தை கட்டியெழுப்புதல்’ என்ற தொனிப்பொருளில் இது நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாநாட்டில் உரையாற்றினார்.
*. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை அமுல்படுத்தியது. வாகனத் தொழில் துறை , தங்கம் மற்றும் ஏனைய சில உலோகங்கள் மீது அமெரிக்காவின் இந்த தடை அமுலாகியது. ஈரான் மீதான அமெரிக்காவின் இரண்டாவது பொருளாதாரத்தடை எதிர்வரும் நவம்பர் மாதம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*. சவூதி கைது செய்த சமார் படாவி ( Samar Badawi )உட்பட பெண்னுரிமை மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை விடுவிக்க கனடா கோரியதால், கனடாவுடனான வர்த்தக மற்றும் முதலீடுகளை சவூதி முடக்கியது. அத்துடன் கனடா தூதுவரையும் 24 மணி நேரத்தில் வெளியேறுமாறு உத்தரவிட்டதுடன் தனது நாட்டுத் தூதுவரையும் சவூதி திரும்பப் பெற்றுக் கொண்டது. அத்துடன் கனடாவுடனான நேரடி விமானப் போக்குவரத்தையும் சவூதி இடைநிறுத்தியது. கனடாவில் மருத்துவச் சிகிச்சை பெற சவூதியருக்குத் தடையும் விதிக்கப்பட்டது.
*. தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி தனது 95 ஆவது வயதில் காலமானார். இவர் ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பசேல்ட் நியமிக்கப்படுவதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டரஸ் அறிவித்தார்.
*. பாக்கர் சூரிய ஆய்வுகலன் என்ற விண்கலத்தை நாசா விண்ணுக்கு ஏவியது. சூரிய காற்று, சூரியனின் நிலையான பொருட்கள், சூரிய ஒளி வட்டத்தின் வெப்ப நிலை பற்றி இது ஆராயவுள்ளது.
*. இந்தோனேசியாவின் லொம்பொத் தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் அண்ணளவாக 400 பேரளவில் பலியாகினர்.
*. நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி. எஸ் நைபால் லண்டனில் காலமானார்.
*. உலகில் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தை ஆஸ்திரியாவின் வியன்னா நகரமும் இரண்டாம் இடத்தை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரமும் பெற்றுக் கொண்டன. கடைசி இடத்தை சிரியாவின் டமஸ்கஸ் பெற்றுக் கொண்டது.
*. இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார். 1996இலும் 1998 இலிருந்து 2004 வரையும் இந்தியாவின் பிரதமராக இவர் பதவி வகித்தார்.
*. இந்தியாவின் கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளம், காற்று காரணமாக அண்ணளவாக 400 பேர் மரணமடைந்தார்கள்.
*. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் 80 வயதில் காலமானார். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் 7 ஆவது செயலாளராக கடமையாற்றியவராவார்.1997 தொடக்கம் 2006 வரை இவரது பதவிக் காலமாகும்.
*. பாக்கிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார். பாக்கிஸ்தானின் பாராளுவமன்றத் தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. ‘பாக்கிஸ்தான் தெஹ்ரீக் எ இன்சாப’; இவரது கட்சியாகும்.
*. வெனிசூவேலாவில் புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. டீள.ளு
*. கட்சித் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கம் டேர்ன்பல் தனது பதவியை இராஜிநாமா செய்தார். புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் பதவியேற்றார்.
*. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மெக்கெய்ன் மரணமானார். 2008 ஜனாதிபதித் தேர்தலில் இவர் வேட்பாளர் பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
*. உலகக்கிண்ண கரம் ஆடவர் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து இலங்கை அணி வெற்றி பெற்றது. மகளிர் பிரிவில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை